சனி பிரதோஷ வழிபாடு
பெரம்பலூர் மாவட்டத்தில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மாசி மாத முதல் பிரதோஷம் சனிக்கிழமையில் வந்ததாலும், நேற்று மகா சிவராத்திரி விழா என்பதாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சனி பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று ஐதீகம் பக்தர்களிடையே உள்ளதால் சிவன் கோவில்களில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். பின்னர் அவர்கள் மகா சிவராத்தியையொட்டி கோவிலில் விடிய, விடிய நடைபெற்ற 4 கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.