சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும்
ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க தங்களிடம் வசதி இல்லை என்றும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்
கள்ளக்குறிச்சி
கருத்துகேட்பு கூட்டம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர், மற்ற கல்வி நிர்வாகத்தினர் ஆகியோருக்கான கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பள்ளி தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
உடனடியாக திறக்க வேண்டும்
அப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டும். உடனடியாக அந்த பள்ளியை திறக்க வேண்டும் எனவும், சான்றிதழ் எரிந்து விட்டது என கூறினார்கள். சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தங்களிடம் செல்போன் வாங்க வசதியில்லை என்றனர்.
அதேபோல் ஆசிரியர்கள் தங்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் போன்றவை எரிந்துவிட்டது எனவும், டி.ஆர்.பி. போன்ற தேர்வுகள் எழுதியுள்ளோம் அதற்கு நேர்காணலுக்கு உடனடியாக சான்றுகள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
உறுதிமொழிப்படிவம்
இதற்கு கலெக்டர் பதில் அளித்து கூறும்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் உடனடியாக சான்றிதழ் பெற்றுத்தரப்படும். பெற்றோர்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழி படிவத்தில் மாணவர் பெயர், வகுப்பு போன்ற விபரங்களை நிரப்பி பிறப்புச் சான்று, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்றுகள் போன்ற சான்றிதழ் விவரம் மற்றும் சக்தி பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மற்றும் நேரடி வகுப்பில் படிக்க விருப்பம், வேறு பள்ளியில் படிக்க விருப்பம் போன்ற கருத்துக்களை பூர்த்தி செய்து இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
விரைந்து நடவடிக்கை
இதை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் சக்தி மெட்ரிக் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பள்ளியில் படிப்படியாக அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் இன்று(புதன்கிழமை) முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். அடுத்த வாரம் 9 முதல் 12-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளது. விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த நடவடிகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.