பிளஸ்-1 தேர்வின்போது மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

காஞ்சீபுரம் அருகே பிளஸ்-1 தேர்வு எழுத உதவியபோது மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-16 09:20 GMT

பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 917 பேர் பிளஸ் -2 தேர்வையும், 13 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வையும் எழுதுகின்றனர். இதற்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி அரசு மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.

பாலியல் தொல்லை

இதில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-1 தனித்தேர்வு எழுத வந்தார். மாணவிக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்த நிலையில் தேர்வு அலுவலரான ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகன்நாத் (வயது 28) மாணவிக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு சென்ற மாணவி, தேர்வு எழுத உதவி செய்த ஆசிரியர் ஜெகன்நாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்தார்.

அதன் பேரில் பெற்றோர் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மாற்றுத் திறனாளி மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் ஜெகன்நாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்