பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: மாயமான ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்வதில் ஆட்சேபனை இல்லை அரசு தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்கள் தகவல்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று விழுப்புரம் கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீல்களும், எதிர்தரப்பு வக்கீல்களும் தெரிவித்தனர்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆட்சேபனை இல்லை
இதையடுத்து இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் திடீரென மாயமானதாகவும், அவற்றை நீதிமன்ற ஊழியர்கள் வேறு இடத்தில் வைத்துள்ளதாகவும், அதனை தேடி கண்டுபிடித்து தருகிறோம் என்று கூறி 4 ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதுபற்றிய விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வக்கீல்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வக்கீல்களிடம் நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார்.
பின்னர், மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்று நீதிபதி கேட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள், தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவித்தனர். தொடர்ந்து, மாயமான ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி கூறியதற்கு, அவர்கள், இதுபற்றி எங்களின் உயர்அதிகாரிகளிடம் பேசிவிட்டு ஆவணங்களின் நகல்களை கோர்ட்டில் தாக்கல் செய்வதாக கூறினர்.
போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகளான தற்போது மதுரையில் தெற்கு மண்டல கலால் பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் வருண்குமார், பெரம்பலூர் போலீஸ்காரர் வினோத்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.