தையல் நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

தையல் நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 18:02 GMT

கரூர்,

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து வேலைதேடுவோருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் இடையே தொடர்பினை ஏற்படுத்தி தரும் திட்டமாக பாலம் திட்டம் கடந்த மார்ச் 8-ந்தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகத்தால் வேலை தேடுவோருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு பாலம் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது, திறன் இடைவெளி நிலையை நிவர்த்தி செய்து திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை வழங்குதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வேலை தேடும் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பணிக்கு செல்லும் பயண தொலைவு அதிகமாக இருக்கும் காரணத்தினால் பணிக்கு செல்வதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு கரூர் மாவட்டத்தில், 8 வட்டாரங்களிலும் தையல் தொழில் நிறுவனங்கள் தங்களது துணை உற்பத்தி அலகினை அமைக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான இடமும், தேவையான ஆட்களும் மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். எனவே விருப்பமுள்ள தையல் தொழில் நிறுவனங்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு நகர வாழ்வாதார மையம் (பாலம் திட்டம்) கரூர், மாநகராட்சி அலுவலகம் எதிரில் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மகளிர் திட்ட அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்