கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கொல்லச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நான்கு சாலை சந்திப்பில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ் தண்ணீர் வடிந்து கழிவுநீர் போல தேங்கியுள்ளது. அதில் நாய்களும், பன்றிகளும் உருண்டு, புரளுவதால் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் போல மாறி உள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
அதற்கு கீழ் பகுதியிலேயே ஆழ்குழாய் கிணற்றில் குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுவதால் கழிவுநீரும் கலந்து விடும் நிலை உள்ளது. மேலும் அந்த தொட்டிக்கு நீர் ஏற்றும் குடிநீர் குழாய் முழுவதும் பாசி படிந்து அசுத்தமாக காணப்படுவதால் அதன் வழியாக தண்ணீரில் கழிவுகள் கலக்கும் அபாயமும் உள்ளது. அந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
கோரிக்கை
மேலும் அந்த பகுதி முழுவதும் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றனர்.
இந்த தண்ணீரில் கழிவுகள் கலப்பதற்கு முன்பு இதனை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.