குடிநீருடன் கலந்து கழிவுநீர் வினியோகம்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்பட்டது. அதில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீர்
ஆண்டிப்பட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சத்யாநகர் பகுதி உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி சார்பில் சத்யாநகர் பகுதியில் வடிகால் கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதில் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் வந்தது. மேலும் அந்த தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. குடிநீரில் கழிவுநீர் கலந்தது குறித்து ஆய்வு செய்தபோது, வடிகால் பணிகள் முடிவதற்குள் தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் சென்று தேங்கி நின்று, சேதமடைந்த குழாய் வழியாக குடிநீரில் கலந்து இருப்பது தெரியவந்தது.
தொற்றுநோய்
கடந்த சில நாட்களாக குழந்தைகள் உள்பட பலருக்கும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவி மக்களை அச்சப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இதுபோன்று கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.