மக்கள் நீதிமன்றத்தில் 243 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 243 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.12½ கோடி அளவில் இழப்பீடு வழங்கப்பட்டது
விழுப்புரம்
மக்கள் நீதிமன்றம்
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், சார்பு நீதிபதிகள் விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், சுந்தரபாண்டியன் மற்றும் அரசு வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
243 வழக்குகளுக்கு தீர்வு
முகாமில் 320-க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 243 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.12 கோடியே 58 லட்சத்து 32 ஆயிரத்து 43-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் கடந்த 2019 ஜனவரி மாதம் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் தச்சநல்லூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் விக்கிரவாண்டி அருகில் சாலை விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி வக்கீல் செல்வக்குமார் நடத்திய வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து சமரச முறையில் பெற்றுத்தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பஷீர் மேற்பார்வையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.