மக்கள் கோர்ட்டில் 137 வழக்குகளுக்கு தீ்ர்வு
நெல்லையில் நடந்த மக்கள் கோர்ட்டில் 137 வழக்குகளுக்கு தீ்ர்வு காணப்பட்டது.
சென்னை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, 2023-ம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கில் தீர்வு காண சிறப்பு மக்கள் கோர்ட்டு நேற்று நெல்லை மற்றும் மாவட்டத்தில் மொத்தம் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மக்கள் கோர்ட்டை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும் (பொறுப்பு), போக்சோ கோர்ட்டு நீதிபதியுமான அன்பு செல்வி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் பன்னீர்செல்வம், மோகன்ராம், இசக்கியப்பன், வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் கோர்ட்டில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் உட்பட மொத்தம் 228 வழக்குகள் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 137 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 76 லட்சத்து 47 ஆயிரத்து 549 சமரசத் தொகைக்கு முடிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்து இருந்தார்.