தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி:தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்
தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக தென்மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதலாக 2 வழி திறக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி,
தொடர்விடுமுறை
தமிழகத்தில் ஆயூதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு வரும் 23, 24 ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறையாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு விடுமுறை நாட்களுக்கு முன்பாக சனி, ஞாயிறு விடுமுறை தினங்களும் வருவதால் சென்னையில் பணிபுாியும் பெரும்பாலானவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமானவர்கள் புறப்பட்டு சென்றனா். குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
அணிவகுத்து செல்லும் வாகனங்கள்
இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை முதல் வாகனங்கள் அணிவகுத்து செல்வதை காணமுடிந்தது. இந்த நிலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 6 லேன்கள் வழியாக வாகனங்கள் செல்வது வழக்கம். தற்போது, செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நெரிசலை தவிர்க்க நேற்று முன்தினம் 7 மணி முதல் கூடுதலாக 2 லேன்கள் திறக்கப்பட்டு மொத்தம் 8 லேன்கள் வழியாக வாகனங்கள் செல்கின்றன. வழக்கமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 26 ஆயிரம் வாகனங்கள் செல்லும். ஆனால் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 40 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. நேற்று மாலை 6 மணி வரை 34 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவு 12 மணிவரை 43 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் கடந்து சென்றன. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசார், ஈடுபட்டுள்ளனர்.