செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது - செந்தில்பாலாஜி தரப்பு வாதம்

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி தரப்பு வாதிட்டது.

Update: 2023-06-27 05:51 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு விரோதமானது.

கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்-க்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கதுறை கூறுகிறது. இது சம்பந்தமாக காலை 8:12 மணிக்கு தான் அனுப்பப்பட்டுள்ளது. கைது மொமோவோ, கைது குறித்த தகவலோ கைது செய்தபோது தயாரிக்கப்படவில்லை. கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது;

சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. இதுசம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கும்போது, இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி.எஸ் சட்டங்களில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அமலாக்கத்துறைக்கு நாடாளுமன்றம் அப்படி எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. நாடாளுமன்றமே வழங்காத ஒரு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது. சட்டவிரோத கைது என்பதை மனதில் கொள்ளாமல் முதன்மை அமர்வு நீதிபதி, நீதிமன்ற காவல் வழங்கியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. இயந்திரதனமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்