நிறம் மாறிய கடல் நீர் ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

Update: 2023-03-28 18:45 GMT

நாகர்கோவில்:

மணவாளக்குறிச்சியில் நிறம் மாறிய கடல் நீர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சிவபிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்பிறகு கூட்டத்தில் மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

மணவாளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் நீரின் நிறம் மாறி காணப்பட்டது. அரிய வகை மணல் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு காரணமாக தான் கடல்நீர் நிறம் மாறி இருக்கிறது. அதில் கதிர் வீச்சு இருப்பதாகவும் உணர்கிறோம். ஏன் எனில் அங்கு மீன்கள் இறந்து கிடந்தன. இதனால் மீன் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஐ.ஆர்.இ. மணல் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

குமரி மாவட்டத்தில் விசைப்படகுகள் புதுப்பிக்கும் காலம் 3 ஆண்டுகளாக இருந்த நிலையில் ஒரு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே விசைப்படகு புதுப்பிக்கும் காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும். இழுவலை மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி சாவாளை மீன்கள் பிடிக்க தடை விதிக்க வேண்டும். மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.

தூத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக இடம் தேர்வு செய்ய அதிகாரிகளை அழைத்துச் சென்று சில பகுதியை காட்டினோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் குப்பைகளை கடலிலும், பொது இடங்களிலும் கொட்டி வருகிறார்கள். எனவே தூத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

கடல் நீர் ஆய்வு

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், "மணவாளக்குறிச்சி பகுதியில் கடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த தண்ணீரை ஆய்வுக்காக தற்போது அனுப்பி உள்ளோம். ஏற்கனவே மணல் ஆலையில் இருந்து கடலில் விடப்படும் தண்ணீரால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு மண்ணை சுத்தம் செய்யும் போது வெளிவந்த தண்ணீரின் காரணமாகத்தான் கடலில் மாற்றம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

வருவாய்த்துறையில்...

மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்க வழிவகை இல்லை. வருவாய்த்துறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். சாவாளை மீன்களை பிடிக்க 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி விசைப்படகுகளின் உரிம காலம் ஓராண்டாக திருத்தியமைத்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. படகு உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்கான ஆணை வழங்க வேண்டுவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. தூத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றனர்.

கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்துறை உதவி இயக்குனர் மோகன், இணை இயக்குனர் காசிநாத பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்