சசிகலாவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபிறகு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
கட்டணம்
தன்னை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சென்னை சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சிவில் கோர்ட்டு, இந்த வழக்கைத் தொடர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரமில்லை எனக்கூறி அவரது வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இதை எதிர்த்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப கோர்ட்டு கட்டணம் செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் மேல்முறையீட்டு வழக்கையும் நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு பதிவுத்துறையில் முறையாக கோர்ட்டு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்த பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.