சேலம்
சேலம் ரேஷன் கடைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.135-க்கு விற்பனை ஆனது.
தக்காளி விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு, மேச்சேரி, தலைவாசல், கருமந்துறை, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மன்னார்பாளையம், பெருமாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக அளவு வெயில் அடித்ததன் காரணமாக தக்காளி செடிகளை நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெளிமாநிலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் அங்கிருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த பல நாட்களாக தக்காளி விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டன. கடந்த சில நாட்களாக விலை குறைந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டன.
மீண்டும் உயர்வு
இந்த நிலையில் தற்போது தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.135-க்கு விற்பனை ஆகின. வெளிமார்க்கெட்டில் ரூ.160 வரை விற்கப்பட்டன. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது வழக்கமாக ஒரு கிலோ தக்காளி வாங்குபவர்கள் ½ கிலோ தக்காளியை வாங்கி செல்வதை காண முடிந்தது.
இதனிடையே விலை உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சேலம் மாநகர் பகுதியில் செரி ரோடு உள்ளிட்ட 20 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ஒரு நாளைக்கு 1 டன் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி இன்று (நேற்று) ஒரு கிலோ தக்காளி ரூ.60 வீதம், 1 டன் தக்காளி விற்கப்பட்டது. இதை குடும்பத்தலைவிகள் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர் என்று கூறினர்.