ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் சங்க வட்டக்கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வட்டக்கிளை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கூட்டத்திற்கு, வட்டத் தலைவர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாம்பசிவன், மாவட்ட செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ராமகிஷ்ணன், ஞானசேகர் ஆகியோர் செயல்பட்டனர். கூட்டத்தில், வட்டக்கிளை தலைவராக ராஜபாண்டி, செயலாளராக ஊமைத்தரை சாமுவேல், பொருளாளராக வேதசிகாமணி பாஸ்கரன், துணை தலைவர்களாக நியூபெல் ஜெபராஜ், ரத்தினகுமார், ரெஜினால்டு முராயிஸ், துணை செயலாளர்களாக சுதந்திரம், செல்வின், விஜயராகவன் மற்றும் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக உத்தமர், ராஜ்குமார், பிச்சைமுத்து ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் கொடுக்க வேண்டிய 4 சதவீத அகவிலை படியினை 4 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை, உடனடியாக நிலுவை தொகையுடன் அரசு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்குப்பின் விண்ணப்பித்தவர்களுக்கு விதிமுறைகளின் படி உடனடியாக மருத்துவ காப்பீட்டு தொகையினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.