அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க 2 இடங்கள் தேர்வு

கொடைக்கானலில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி தலைவர் கூறினார்.

Update: 2023-04-10 19:00 GMT

நகராட்சி கூட்டம்

கொடைக்கானல் நகராட்சி கூட்டம், தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையர் நாராயணன் வரவேற்றார். இதில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு:-

சுப்பிரமணி பால்ராஜ் (அ.தி.மு.க.):- கொடைக்கானல் நகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவுன்சிலர்களை யார் என்று தெரியவில்லை. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.

அடையாள அட்டை

பரிமளா (தி.மு.க.):- கவுன்சிலர்களுக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

ஆணையர்:- உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபா ஷர்மிலி (தி.மு.க.):- நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.

ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- அரசு மூலம் சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில் தனியாக ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆணையர்:- இது அரசின் கொள்கை முடிவு. நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் பகுதியில் சுமார் 1,050 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அட்டை இல்லாதவர்கள் வருங்காலங்களில் கடை வைக்க முடியாது.

வாகன நிறுத்துமிடம்

தலைவர்:- நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் இடத்தை வாங்குவதற்கு, அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அருள்சாமி (தி.மு.க.):- சீசன் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.

தலைவர்:- கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள்.

ரூ.2 கோடி

மோகன் (தி.மு.க.):- நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

ஆணையா்:- நகரில் உள்ள 24 வார்டுகளிலும் உள்ள சாலைகளை சீரமைக்க சுமார் ரூ.2 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு தற்காலிகமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.14 கோடி திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி சுங்க வரி

ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- சுங்கவரி நிதி பயன்பாடு எந்த அளவில் உள்ளது. அத்துடன் புதிய வீடுகளுக்கு வரி விதிக்க வேண்டும்.

தலைவர்:- ரூ.3 கோடி சுங்க வரி உள்ளது. அதன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருதயராஜா (அ.தி.மு.க.):- நாய்ஸ் ரோடு பகுதியில் காட்டெருமைகள் செல்லும் வழித்தடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்:- உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போஸ் (சுயே):- பாக்கியபுரம் பகுதியில் 1959-ம் ஆண்டில் கட்டப்பட்ட கழிப்பறையை காணவில்லை. இதில் உள்ள 6¼ சென்ட் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

ஆணையர்:- நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் உடனடி ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பரிமளா (தி.மு.க.):- சமுதாயக் கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ச்சி பணிகள்

இருதயராஜா (அ.தி.மு.க.):- கோக்கர்ஸ் வாக் பகுதியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆணையர்:- அப்பகுதியை புதுப்பிக்க ரூ.7 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொறியாளர்:- நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக 587 மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்