உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்

உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-04-12 18:56 GMT

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் நகராட்சியில் 55 ஆயிரம் குடியிருப்புகளும், 8 ஆயிரம் வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவுநீர் தொட்டிகளில், இறுதி கழிவான கசடுகளை அகற்றி, பொது இடங்களில் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதை தவிர்க்க கசடு கழிவு மேலாண்மை செயல்பட்டு வருகிறது.

இதற்காக நகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவுநீர் தொட்டிகளில் கசடுகள் உறிஞ்சப்பட்டு, நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

கசடு கழிவுகள் மற்றும் கழிவுநீரை உறிஞ்சி ஏற்றி செல்லும் வாகனங்கள் நகராட்சியில் உரிமம் பெற வேண்டும். இதற்காக வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வாகனம் மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் கசடு கழிவுநீர் எடுத்து செல்ல உரிமம் வழங்கப்படும். நகராட்சியின் உரிமம் இன்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்