கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல், கற்கள் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல், கற்கள் கடத்திய 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-06-12 16:31 GMT

கிருஷ்ணகிரி:

ஓசூர் ஆலூர் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுநாத் கதிரிப்பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று இருந்த 2 லாரிகளை சோதனை செய்த போது ஒரு லாரியில் கற்களும், மற்றொரு லாரியில் எம்.சாண்ட் மணலும் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 2 லாரிகளையும் அட்கோ போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல புக்கசாகரம் பகுதியில் அனுமதியின்றி கற்கள் கடத்திய டிப்பர் லாரியை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் தலைமையில் குழுவினர் பிடித்து பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல கந்திகுப்பம் பகுதியில் கற்கள் கடத்தியதாக 2 லாரிகளை கனிம வள பிரிவு அதிகாரிகள் பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக கற்கள் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்