பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்குகாரில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்வடமாநில வாலிபர் கைது

Update: 2023-06-15 19:57 GMT

பனமரத்துப்பட்டி 

பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

சேலம் மாவட்டம் வழியாக நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் மல்லூர் பைபாஸ் பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

கைது-பறிமுதல்

அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன்குமார் மகன் பிரவீன்குமார் பிசோயி (வயது 22) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு புகையிலை பொருட்கள் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் கார் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்