தனியார் கல்லூரியின் 2 பஸ்கள் பறிமுதல்

விபத்தில் சிறுவன் சாவு: தனியார் கல்லூரியின் 2 பஸ்கள் பறிமுதல் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை;

Update: 2022-06-18 17:44 GMT

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த வாணியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தனியார் கல்லூரி பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்றன. இதில் ஒரு பஸ் இன்னொரு பஸ்சை முந்திசெல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளின் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் அருகே காங்கேயனூரை சேர்ந்த அன்பரசன் மகன் கவிசர்மா(வயது 5) என்ற சிறுவனும், அவனது தாய்மாமாவான பண்ருட்டி தாலுகா எல்.என்.புரம் புதுநகர் பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த் (40) என்பவரும் பலத்த காயமடைந்தனர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் கவிசர்மா பரிதாபமாக இறந்தான். ரஜினிகாந்த், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான தனியார் கல்லூரியை சேர்ந்த 2 பஸ்களையும் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர்களான பண்ருட்டி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுப்புராயன், கடலூர் புதுநகர் காலனியை சேர்ந்த செல்வக்குமார் ஆகிய இருவரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்