பழனி அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட 11 லாரிகள் பறிமுதல்
பழனி அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி அருகே கீரனூர் வழியாக இயக்கப்படும் லாரிகள், அதிவேகமாக இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கல், மண் ஏற்றி வரும் லாரிகள் பள்ளி வளாகம், கோவில், பள்ளிவாசல் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் பொதுமக்கள் பலமுறை எச்சரித்தனர். ஆனால் மீண்டும் லாரிகள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கீரனூர் பள்ளிவாசல் அருகே மண் ஏற்றி வந்த 11 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கிருபா, கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.