வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல்
கிருஷ்ணகிரியில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் உள்ளன. இதில் வீட்டு வரி ரூ. 5.25 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.3.26 கோடியும், கடை வாடகை ரூ.5.46 கோடியும் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. மேலும் பாதாள சாக்கடை கட்டணம் ரூ.1.65 கோடியும், தொழில் வரி ரூ.58 லட்சமும் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு மொத்தம் ரூ.17.28 கோடியை செலுத்தாமல் பொதுமக்கள் நிலுவையில் வைத்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து வரி வகைகளை செலுத்த வேண்டும். தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
கடைகளுக்கு சீல்
அதன்படி, கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக கடை வாடகை செலுத்தாத, கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து பெங்களூரு சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் ஒரு கடை, புதிய பஸ் நிலையத்தில் ஒரு கடைக்கும் நகராட்சி வருவாய் அலுவலர் லூகாஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் சீல் வைத்தனர்.
மேலும் உடனே கடை வாடகை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.