பரமக்குடி
பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலையில் நகராட்சி அலுவலர்கள் சென்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதன்படி பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் திருமுருகன் என்பவர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 920 உள்ளது. தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் வாடகை செலுத்தாதால் அவரது கடையை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல் உழவர்சந்தை பகுதியில் ராஜா என்பவரது கடையையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் உடனடியாக பணம் கட்டியதால் அவரது கடையை மீண்டும் திறந்து விட்டனர். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வரிகள் அதிக அளவில் உள்ளது. அதை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.