கலப்பட கருப்பட்டி தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு
உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி தயாரித்த ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் சீல் வைத்தார். அந்த ஆலையில் இருந்து 70 மூட்டை சீனி, வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி தயாரித்த ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் சீல் வைத்தார். அந்த ஆலையில் இருந்து 70 மூட்டை சீனி, வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
அலுவலர்கள் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன், தோட்டக்கலைத்துறை அலுவலர் ஆனந்த், பனை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உடன்குடி பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு கருப்பட்டி தயாரிப்பு ஆலையில் கரும்பு வெல்லம், சீனி ஆகியவற்றை கொண்டு கருப்பட்டி என்ற பெயரில் கலப்பட கருப்பட்டி தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலைக்கு சீல் வைப்பு
உடனடியாக அங்கு இருந்த 28 மூட்டை சீனி, 42 மூட்டை கரும்பு வெல்லம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர். இதே போன்று அந்த பகுதியில் உள்ள பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது கற்கண்டில் சீனி கலந்ததாக சந்தேகத்தின் பேரிலும், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாலும், சுமார் 15 ஆயிரம் கிலோ அளவுள்ள கூழ பதநீர், 300 கிலோ பனங்கற்கண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கை
மேலும் கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் எவரேனும் சீனி அல்லது கரும்பு வெல்லம் கலந்து கருப்பட்டி தயாரித்தால், அந்த நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட கருப்பட்டி தயார் செய்வது கண்டறியப்பட்டால், அந்த வளாகம் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். பொதுமக்கள் சீனி அல்லது கரும்பு வெல்லம் கலந்து கருப்பட்டி தயாரிப்பு செய்வது குறித்தோ அல்லது போலி கருப்பட்டி தயாரிப்பு குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு புகாரை அனுப்பலாம். புகாரைப் பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.