சேலம், ஆத்தூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

சேலம், ஆத்தூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-06-03 20:53 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மளிகை கடை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட பல கடைகளில் ஆய்வு செய்தனர்.

சேலம் 5 ரோடு, ஆத்தூரில் உள்ள 2 பேக்கரி கடைகள் மற்றும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடை ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடைகளில் ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்றதாக 2 முறை அபராதம் விதித்தும் மீண்டும் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நேற்று வரை 170 கடைகளில் இருந்து 8½ டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 70 லட்சம் ஆகும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து 25 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அவை அனைத்தும் மனிதன் உண்ண தகுந்தது அல்ல என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை பெற்றதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றவியல் கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குற்றங்களுக்காக 68 வணிகர்களின் மீது பல்வேறு குற்றவியல் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 30 வழக்குகள் நடைமுறையில் உள்ளன.

இதுபோன்ற தொடர் குற்றம் செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006 பிரிவு 34-ன் படி அவசர தடையாணை பெறப்பட்டு வணிகம் மேற்கொள்வதை தடைசெய்யப்பட்டு கடைகள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்