புகையிலை பொருட்களை விற்ற மளிகை கடைக்கு 'சீல்'
விராலிமலையில் புகையிலை பொருட்களை விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து அந்த கடையில் சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த கடை உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சென்றனர். ஆனால் மீண்டும் அந்த மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அந்த மளிகை கடையில் தொடர்ந்து விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவீன்குமாருக்கு கிடைத்த தகவலையடுத்து இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி விராலிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர், விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி (பயிற்சி), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாமணி உள்ளிட்ட போலீசார் அந்த கடைக்கு சீல் வைப்பதற்கான அரசு ஆணையை உரிமையாளரிடம் வழங்கி கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.