உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்' வைத்தனர்.
மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
திடீர் சோதனை
மயிலாடுதுறை சின்னகடைவீதியில் உள்ள டீ கடையில் கடந்த 31-ம் தேதி இரவு உணவுபாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அந்த டீக்கடையில் வடை தயாரிக்க பயன்படும் எண்ணெய்யை மாற்றாமல் அதை மீண்டும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த டீக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சிலர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சுகாதாரமற்ற முறையில் எத்தனையோ கடைகள் உள்ளன. அங்கு நடவடிக்கை எடுக்காமல் இந்த டீக்கடையை மட்டும் ஏன் பூட்டி சீல் வைக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதனால் டீக்கடைக்கு சீல் வைக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதையடுத்து டீக்கடைக்கு எதிரே உள்ள பழக்கடைக்கு அதிகாாிகள்ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த மாம்பழங்கள் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்டதும், கடையின் உரிமம் புதுப்பிக்கப்படாததும் தெரியவந்தது. இதன் காரணமாக அதிகாரிகள் அந்த பழக்கடைக்கு சீல் வைக்க முயன்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், டீக்கடைக்கு சீல் வைக்காமல், பழக்கடைக்கு மட்டும் சீல் வைக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகளால் பழக்கடைக்கும் சீல் வைக்க முடியவில்லை.
'சீல்' வைத்தனர்
இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்துகொண்டிருந்த பொதுமக்கள் பலரும் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், அலுவலர்கள் சீனிவாசன், அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சின்னகடைத்தெருவில் உள்ள டீக்கடை மற்றும் பழக்கடையில் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகள் உரிமம் இல்லாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்து சென்றனர்.