பெண்களை வைத்து விபசாரம்:ஓசூரில் மசாஜ் சென்டருக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை

Update:2023-06-10 01:00 IST

ஓசூர்:

ஓசூரில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் 3-வது மாடியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கிருந்த 7 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு உரிய பதில் அளிக்காததால், நேற்று அந்த மசாஜ் சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள், ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் சீல் வைத்தனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே மசாஜ் சென்டர் தொடங்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்