பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
முக்கூடலில் பெட்ரோல் பங்க் ஊழியர் அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கூடல்:
முக்கூடல் ஆலங்குளம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்குக்கு நேற்று முன்தினம் வந்த சிலர், மோட்டார் சைக்கிள் டேங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு அதற்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்து உள்ளனர். நேற்று 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் மீண்டும் பெட்ரோல் பங்குக்கு வந்து, அங்கு பணியில் இருந்த ஊழியர் சுபாசை அரிவாளால் வெட்டி உள்ளனர். உடனே மற்ற ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, சீதபற்பநல்லூரை சேர்ந்த விஜய் (வயது 23), கருத்தப்பாண்டி (30), ரங்கசாமி (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சுபாஷ், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.