மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு; கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

ஆலங்குளம் அருகே மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-26 20:31 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கனகராஜ் (வயது 25). கூலி தொழிலாளி.

இவருக்கும், குருக்கள்பட்டி கருத்தானூரைச் சேர்ந்த அத்தை மகளான கவிக்குயிலுக்கும் (22) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இந்திரா காலனியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் கவிக்குயிலுக்கும், பக்கத்து ஊரான மலையான்குளத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் பொக்லைன் ஆபரேட்டரான வெங்கடேசுக்கும் (24) பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

நேற்று காலையில் கனகராஜ் வேலைக்கு சென்றதும், அவரது வீட்டுக்கு சென்ற வெங்கடேஷ் கவிக்குயிலுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கவிக்குயிலின் மாமனார் நடராஜன் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருவரையும் கண்டித்தார். மேலும் மகன் கனகராஜிடமும், கவிக்குயிலின் குடும்பத்தினரிடமும் தெரிவித்தார்.

அரிவாள் வெட்டு

இதையடுத்து அங்கு வந்த கனகராஜ், கவிக்குயிலின் தாய் முத்துமாரி, அண்ணன் அன்பரசு (25) ஆகியோர் வெங்கடேஷை கண்டித்தனர். அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ், அன்பரசு ஆகிய 2 பேரும் சேர்ந்து வெங்கடேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரது இடதுகை மணிக்கட்டு துண்டானது. பின்னர் கனகராஜ், அன்பரசு தப்பி சென்றனர்.

இதற்கிடையே கள்ளக்காதலன் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதைப் பார்த்த கவிக்குயில் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த கிணற்றில் 5 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

4 பேருக்கு வலைவீச்சு

தகவல் அறிந்ததும், ஊத்துமலை போலீசார் விரைந்து சென்றனர். படுகாயமடைந்த வெங்கடேஷை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிணற்றில் தத்தளித்த கவிக்குயிலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கனகராஜ், அன்பரசு, நடராஜன், முத்துமாரி ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்