டிரைவருக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
முனைஞ்சிப்பட்டி அருகே டிரைவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம் வடக்குத்தெரு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் இசக்கிமுத்து (வயது 32), லாரி டிரைவர். அதே ஊர் கீழத்தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (55). கூலி தொழிலாளி.
நேற்று முன்தினம் இசக்கிமுத்து வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டார்குளம் விலக்கு பகுதியில் வரும்போது வெள்ளையன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் இசக்கிமுத்து லிப்ட் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையன், இசக்கிமுத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி விசாரணை நடத்தி வெள்ளையனை கைது செய்தார்.