தக்கலை:
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60), கொத்தனார். இவருடைய வீட்டின் அருகே சத்தியபாமா என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு செல்லும் பாதையை அவரது சகோதரர் ரெத்தினகுமார் (47) என்பவர் மண் போட்டு நிரப்பியுள்ளார். இதனால் கனகராஜ் வீட்டிற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ரெத்தினகுமாரிடம் பாதையில் போடப்பட்ட மண்ணை அகற்றும்படி கனகராஜ் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரெத்தினகுமார் அரிவாளால் கனகராஜின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கனகராஜ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெத்தினகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.