பள்ளி வேன் கவிழ்ந்து 2 மாணவர்கள் காயம்
நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். நேற்று காலையில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று புறப்பட்டது. வேன் மேலப்பாளையம் அருகே தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.