மாணவர்களுக்காக தயாராகும் பள்ளி சீருடைகள்

தஞ்சை மாவட்டத்தில் மாணவர்களுக்காக பள்ளி சீருடைகள் தயாராகி வருகிறது. மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சீருடை தைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-07-05 21:07 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் மாணவர்களுக்காக பள்ளி சீருடைகள் தயாராகி வருகிறது. மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சீருடை தைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி சீருடைகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழகஅரசு இலவச சீருடைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் தொடங்கிய சில நாட்களிலேயே இந்த சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு மாணவருக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஒரு கல்வி ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகிறது.இந்த சீருடைகள் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர், மேல் சட்டையும், 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை, சட்டையும் வழங்கப்படுகின்றன. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையும் (பேண்ட்), மாணவிகளுக்கு சுடிதார், மேல்கோட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

சீருடை நிறங்கள்

1 முதல் 5-ம் வகுப்புக்கு கரும்பச்சை கீழாடை, கட்டம் போட்ட வெளிர் பச்சை மேலாடை, 6 முதல் 8-ம் வகுப்புக்கு சந்தன நிறத்தில் கீழாடை, கட்டம் போட்ட மேலாடை மற்றும் சந்தன நிற மேல் கோட்டும் புதிய சீருடையாக வழங்கப்பட்டு வருகிறது.ஒரு கல்வி ஆண்டில் 4 தடவையாக இந்த சீருடைகள் வழங்கப்படுகின்றன. கோடைவிடுமுறை முடிந்து கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்தவுடன் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டாலும், சீருடை தைப்பதற்கான துணிகள் கொஞ்சம் தாமதமாக வழங்கப்பட்டதால் துரிதமாக சீருடைகள் தைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீருடைகள் தைக்கும் பணியில் மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமூகநலத்துறை

இந்த திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி மகளிர் தையல் கூட்டுறவு சங்க பெண்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சமூகநலத்துறை மூலம் தஞ்சை அண்ணாநகர், தொம்பன்குடிசை, கும்பகோணம் ஆகிய 3 இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பள்ளி சீருடைகள் தைக்கப்பட்டு வருகின்றன. 4 ஜோடி சீருடைகள் வழங்க வேண்டிய நிலையில் இப்போது முதல் ஜோடி சீருடைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

துணி வெட்டும் பணி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் அருகே மாவட்ட துணி வெட்டும் மையம் உள்ளது. இந்த மையத்தில் மாணவ, மாணவிகளின் அளவுகளுக்கு ஏற்ப துணிகள் மிஷின் மூலம் வெட்டப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் நேரடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து துணிகளை வாங்கி சென்று, தங்களது வீடுகளில் வைத்தே சீருடைகளை தைக்கின்றனர். சீருடைகள் தைத்து முடிக்கப்பட்டவுடன் மீண்டும் கூட்டுறவு சங்கங்களுக்கே கொண்டு வந்து கொடுக்கின்றனர்.அங்கே சீருடைகள் சரியான அளவில் தைக்கப்பட்டு இருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து, எம்பிராய்டரி, பித்தான் வைக்கும் பணிக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கே சீருடைகளுக்கு எம்பிராய்டரி, பித்தான் வைக்கப்பட்டவுடன் அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வரை 7 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த சீருடைகள் அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு சீருடைகளை அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்