போதைப்பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Update: 2022-08-11 14:01 GMT

பொள்ளாச்சி

போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாணவ-மாணவிகள் எந்த சூழலிலும் யாருடைய கட்டாயத்தின் பேரில் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது. யாராவது போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவர்களை அதில் இருந்து மீட்க உதவ வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடலும், மனமும் பாதிக்கப்படும் என்றார். அதை தொடர்ந்து ஆசிரியர்கள் உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ், கிராம நிர்வாக அலுவலர் லதாமதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் உடன் இருந்தார்.

இதேபோன்று புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெற்றோர் மாணவ-மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்