கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலெக்டர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-08-16 21:15 GMT

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாணவர்கள் சார்பில் கலெக்டர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் கொடைக் கானல், சிறுமலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பள்ளங்கி, தோனிமலை, கிளாவரை, பன்றிமலை, ஆடலூர், செந்துறை, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த விடுதி தற்போது மூடப்பட்டுவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதில் தங்கியிருந்த மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே விடுதியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். விடுதி வசதி கேட்டு மாணவர்கள் திரண்டதால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்