பள்ளி மாணவன் உடல் உறுப்புகள் தானம்
கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பள்ளி மாணவன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டர். இவருடைய மூத்த மகன் சுதீஷ் (வயது 11) அங்குள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 4-ந் தேதி குடியான்குப்பம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சுதீஷ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுதீஷ் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
முதலுதவிக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் 5-ந் தேதி அனுமதிக்கப்பட்ட சுதீஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனுடைய பெற்றோர் முன்வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
அதையடுத்து சுதீஷின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டன. இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள் ஆகியவை சி.எம்.சி. மருத்துவமனைக்கும், வலது சிறுசீரகம் சென்னை எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
தானமாக பெறப்பட்ட சுதீஷின் இதயம் பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் 4.45 மணியளவில் வேலூரில் இருந்து சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து நெரிசல் இன்றி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான முன்ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.