கார் மோதி பள்ளி மாணவி பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே கார்மோதி பள்ளி மாணவி பலியானார். இதையடுத்து அவரது உறவினர்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-06-29 17:29 GMT

திருவெண்ணெய்நல்லூர்

மாணவி

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் கவிநிலவு(8). இவள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் கவிநிலவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது சித்தப்பா தஷிணாமூர்த்தி மகள் ஈஸ்வரி(18) இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் காரப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கார் மோதியது

இருவேல்பட்டு பஸ் நிறுத்தத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவிநிலவு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தாள். படுகாயம் அடைந்த ஈஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் விபத்து பற்றிய தகவல் அறிந்த கவிநிலவின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நிவாரண உதவி

அப்போது இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாகவும், இதை தடுப்பதற்கு இப்பகுதியில் பேரிகார்டு, வேகத்தடை, மேம்பாலத்தில் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும், இறந்த கவிநிலவின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையடுத்து விபத்தை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் பேரிகார்டுகளை போலீசார் அமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்