பஸ் மோதி பள்ளி மாணவன் பலி. பொதுமக்கள் மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் தனியார் பஸ் மோதி தாய் கண்முன் பலியானான். இதனால் பொதுமக்கள் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 17:57 GMT

பள்ளி மாணவன்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உண்டு. அவர்களில் தரணி (வயது 8) நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

அரையாண்டு விடுமுறை காரணமாக பானுமதி தன்னுடைய தாய் வீடு உள்ள வாணியம்பாடியை அடுத்த கலந்திரா கிராமத்திற்கு சென்று தங்கி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் நரசிங்கபுரம் கிராமத்திற்கு செல்ல குழந்தைகளுடன் நேற்று பிற்பகல் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது தரணி சாலை கடக்க முயன்றுள்ளான்.

பஸ்மோதி பலி

அப்போது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் தரணி மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்சை சிறைபிடித்து கண்ணாடியை உடைத்து, டிரைவரை சரமாரியாக தாக்கிதாக கூறப்படுகிறது. மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கலந்திரா பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்