பஸ் மோதி பள்ளி மாணவி பலி
விருதுநகர் அருகே பஸ் மோதி பள்ளி மாணவி பலியானார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது மகள் கீர்த்தனா (வயது 14), மகன் சுபிசன் (10) ஆகியோருடன் டி.கல்லுபட்டிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கீர்த்தனா அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்புக்கு செல்ல இருந்தாள். இந்தநிலையில் குணசேகரன் தனது இரு குழந்தைகளுடன் வந்த இருசக்கர வாகனம் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் 116 காலனி அருகே வந்தபோது எதிரே அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் வந்த டவுன் பஸ் குணசேகரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் குணசேகரனும், அவரது மகனும் காயங்களுடன் உயிர் தப்பினர். கீர்த்தனா பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பள்ளிக்கு சென்று சக மாணவிகளை சந்திக்கும் மகிழ்ச்சியில் ஊர் திரும்பிய மாணவி கீர்த்தனா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர் பாலகுரு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.