'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வாக்கோட்டையில் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

Update: 2022-10-20 19:00 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வாக்கோட்டையில் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

தொடக்கப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வாக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வாக்கோட்டை, தென்கோவனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் காணப்படுகின்றன. மழை காலங்களில் மழை நீர் கசிவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். சில நேரங்களில் வகுப்பறை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

'தினத்தந்தி' செய்தி

கட்டிடத்தின் தூண்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கட்டிடம் பலம் இழந்து காணப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது.

வேறு இடத்துக்கு மாற்றம்

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று கட்டிடத்தை பார்வையிட்டனர். அதன் பிறகு, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் அருகில் உள்ள நூலக கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது, நூலக கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பள்ளி இயங்கி வருகிறது. உடனடியாக முதற்கட்ட நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்