'பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்க கூடாது' - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையில் பரிந்துரை

பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Update: 2024-06-18 10:35 GMT

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிகளில் சாதி மோதல்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் எனவும், சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது, ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும், கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது, மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்