மாவட்ட தடகள போட்டியில் வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி சாம்பியன்
மாவட்ட தடகள போட்டியில் வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
திசையன்விளை:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள், தக்ஷன் சகோதயா குழுவினரால் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்தது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
11-ம் வகுப்பு மாணவி தியானா 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் முதலிடத்தை வென்றார். 11-ம் வகுப்பு மாணவி அக்ஷயா 100 மீ. ஓட்டம், தொடர் ஓட்டத்தில் முதலிடத்தையும், நீளம் தாண்டுதலில் 2-வது இடத்தையும் வென்றார். 11-ம் வகுப்பு மாணவர்கள் ஜோசப் ஜெஸ்வின் 400 மீ. ஓட்டம், தொடர் ஓட்டத்தில் முதலிடத்தையும், 800 மீ. ஓட்டத்தில் 2-வது இடத்தையும், மாணவர் கபிரியேல் ஸ்மித்வின் 100 மீ. ஓட்டம், தொடர் ஓட்டத்தில் முதலிடத்தையும், நீளம் தாண்டுதலில் 2-வது இடத்தையும் வென்றனர்.
வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தலா ஓரிரு பரிசுகளை வென்று, தக்ஷன் சகோதயா சி.பி.எஸ்.இ.-2023 சுழற்கோப்பையையும் வென்று சாதனை படைத்தனர். சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.