நாசா நடத்திய போட்டியில் ஈரோடு மாணவ- மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்; ஜூன் மாதம் விண்வெளி மையத்தில் பரிசோதனை
நாசா விண்வெளி மையம் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்ட ஈரோடு மாணவ- மாணவிகளின் கண்டுபிடிப்பு அங்கீகாரம் பெற்று உள்ளது. மேலும் வருகிற ஜூன் மாதம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இதற்கான பரிசோதனை நடைபெறுகிறது.
நாசா விண்வெளி மையம் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்ட ஈரோடு மாணவ- மாணவிகளின் கண்டுபிடிப்பு அங்கீகாரம் பெற்று உள்ளது. மேலும் வருகிற ஜூன் மாதம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இதற்கான பரிசோதனை நடைபெறுகிறது.
நாசாவின் போட்டி
ஈரோடு அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் பகுதியில் ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளை உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பு பாடங்களை படிக்கும் டியூசன் மையமாக இது செயல்படுகிறது.
பாடங்கள் கற்பித்தல் மட்டுமின்றி, சர்வதேச அளவிலான அறிவியல் போட்டிகளிலும் மாணவ-மாணவிகளை பங்கெடுக்க வைக்கும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க சர்வதேச விண்வெளி மையமான நாசா மாணவ-மாணவிகளுக்கான ஒரு போட்டியை அறிவித்தது. நாசாவுடன் இணைந்து விண்வெளி ஆய்வு மேற்கொள்ளும் கியூப்ஸ் இன் ஸ்பேஸ் என்கிற அமைப்பு இந்த போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் வகையில் ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளை மாணவர்கள் 11 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னையை சேர்ந்த ஏரோலாஞ்ச் இந்தியா அமைப்பின் பயிற்சியாளர் ஹேம்பிரசாந்த் (இவர் அறக்கட்டளை முன்னாள் மாணவர்) பயிற்சி அளித்தார்.
அங்கீகாரம்
11 மாணவர்களும் விண்வெளியில் ஊதப்பட்ட மென் ரோபாட்களின் செயல்பாடு குறித்த பகுப்பாய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஒரு ஆராய்ச்சி திட்டத்தை அனுப்பி வைத்தனர். இந்த திட்டம் கியூப்ஸ் இன் ஸ்பேஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நாசா மூலம் செயல்படுத்தப்பட தேர்வு பெற்று இருக்கிறது.
இதற்கான பரிசோதனை வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இந்த திட்டம் சார்ந்து மாணவ- மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்பை மேற்கொள்ள நாசாவுக்கு 11 மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பான அழைப்பு கடிதம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
11 மாணவ-மாணவிகள்
இதுபற்றி ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளை நிர்வாகி ராஜ்குமார் கணேசன் கூறியதாவது:-
ஈரோடு நகரையொட்டிய கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் சிறந்த ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
மாணவர்கள் ஆர்.இர்பான் (பி.வி.பி. பள்ளி), எஸ்.சபரீஷ் (ஸ்ரீகிருஷ்ணா கலைக்கல்லூரி, கோவை), எம்.ரோகித் (கலைஞர் கருணாநிதி கல்லூரி, கோவை), வி.தாரனேஸ் (சி.எஸ்.ஐ. பள்ளி), வி.ரியாஸ் (சி.எஸ்.ஐ. பள்ளி), ஆர்.லட்சுமிநாராயணன் (எஸ்.எஸ்.வி. பள்ளி), ஏ.கே.பிரதிஸ் (எஸ்.எஸ்.வி. பள்ளி), மாணவிகள் டி.சவுதாஸ்ரீ (அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம், ஈரோடு), ஆர்.தாரணி (அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம், ஈரோடு), ஜெ.இவாஞ்சலீன் (கிறிஸ்துஜோதி பள்ளி), ஐ.எம்.நிவிதா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜவுளிநகர்) ஆகிய 11 பேரும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் செலுத்தும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான பயண செலவுக்கு மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று விண்ணப்பித்து இருக்கிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய இந்த மாணவ- மாணவிகள் படைத்து இருக்கும் சாதனை பிற்காலத்தில் இன்னும் அவர்களை ஊக்கப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.