3,765 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை
3,765 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,765 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காணொலிக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் தஞ்சை மாவட்ட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் வழங்கினார்
இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி அதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
முதல்கட்டமாக பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து தற்போது தஞ்சை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளில் பயிலும் 472 மாணவிகளுக்கு நிதிஉதவியும், அதற்கான ஏ.டி.எம். கார்டுகளும் வழங்கப்பட்டன. இதைபெற்றுக் கொண்ட மாணவிகள் சிலர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரங்களில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் வந்துள்ளதா? என சரிபார்த்தனர். சில மாணவிகள் ரூ.1000 ரொக்கப்பணத்தையும் எடுத்தனர்.
3,765 மாணவிகள்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 765 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது 472 மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் உடனடியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கி அதற்கான ஏ.டி.எம். கார்டு, உயர்கல்வி வேலை வாய்ப்பு மலர், விழிப்புணர்வு கையேடு ஆகியவையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மாணவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1000-ம் நிதி சென்றுவிடும். இந்த நிதியை கொண்டு மாணவிகள் தங்களது உயர் கல்விக்கு தேவையான செலவை செய்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட கலந்து கொண்டனர்.