625 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 625 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2022-09-05 16:17 GMT

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 625 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்-புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் விழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும். இந்த மாவட்டத்தில் இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

ஆணை

அரசின் இதுபோன்ற திட்டங்களை நீங்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தில் முதல்கட்டமாக உயர்கல்வி பயிலும் 4,170 மாணவிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கூறினார்.

இந்த விழாவில் உயர்கல்வி பயிலும் 625 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் சென்னையில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெர்ஜிலால் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

விழாவில் தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, தடங்கம் ஊராட்சி தலைவர் கவிதா, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், தாசில்தார்கள் ராஜராஜன், பெருமாள், மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்