வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பதிவேற்றம்
ஆற்காட்டில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கேன் செய்து இ.எம்.எஸ். மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நடந்தது.
இதனை கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எந்திரங்கள் பதிவு செய்யப்பட்டு பிற்பகலில் பணிகள் முடிவடைந்தன.
அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரி பார்க்கும் பணிகள் ஜூலை 4-ந் தேதி தொடங்கி நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், ஆற்காடு தாசில்தார் வசந்தி மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.