திட்டக்குடி அருகேஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடிபா.ஜ.க. நிர்வாகிகள் மீது தந்தை, மகன் புகார்
திட்டக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் மீது தந்தை, மகன் புகார் அளித்தனா்.
திட்டக்குடி அருகே எடச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). ஓய்வு பெற்ற ரேஷன் கடை விற்பனையாளர். இவருடைய மகன் விஜயராஜ் (30). என்ஜினீயர். இவர்கள் 2 பேரும் நேற்று ஆம் ஆத்மி கட்சி மனித உரிமை பிரிவு கடலூர் தலைவர்கள் ராமு, ஞானராஜ், திட்டக்குடி செந்தில், வேலாயுதம் மற்றும் நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் என்னுடைய மகன் விஜயராஜிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கினர். ஆனால் இது வரை வேலை வாங்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அவர்கள் கொடுக்கவில்லை.
இது பற்றி திட்டக்குடி போலீசில் புகார் செய்தேன். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரூ.10 லட்சத்தை திருப்பி தருவதாக கூறி சென்றனர்.
ஆனால் இது வரை பணத்தை தரவில்லை. ஆகவே அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.