திருமணம் செய்வதாக கூறிசிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை; வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
திருமணம் செய்வதாக கூறி, சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருமணம் செய்வதாக கூறி, சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருமண ஆசை
சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் காடக நல்லி பகுதியை சேர்ந்தவர் ஜடேபந்தப்பன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). தொழிலாளி. இவர் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஸ்மார்ட் போனில் உள்ள ஹலோ ஆப் மூலம் பழகி, அவரது செல்போன் எண்ணை பெற்றுள்ளார்.
பின்னர், சிறுமியிடம் தொடா்ந்து பேசி காதல் வலையில் விழ வைத்துள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் ஆபாச புகைப்படங்களையும் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு சந்தேகம் வர, கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
போக்சோவில் கைது
இதைத்தொடர்ந்து கார்த்திக் சிறுமியிடம், தன்னிடம் பேசாவிட்டால் உனது ஆபாச போட்டோ, வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்து, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி போக்சோ உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
3 ஆண்டு ஜெயில்
மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்திக்கிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.