நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்

Update: 2023-01-26 15:17 GMT


திருப்பூரில் சுத்தம் செய்யப்பட்ட நொய்யல் ஆற்றில் சுத்தகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல் ஆறு

கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்காக சுத்தகரிப்பு நிலையங்கள் மூலம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்தகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நொய்யல் ஆறு மீண்டும் சுத்தகரிக்கப்பட்டு வர ஆயத்தமானது. ஆனால் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சாய சலவை பட்டறையில் இருந்து சுத்தகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாய சலவை பட்டறையில் இருந்து வெளியேறும் சுத்தகரிக்கப்படாத சாய ஆலை நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

நடவடிக்கை

உடனடியாக இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையெனில் சாய ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு தண்ணீர் காரணமாக தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தண்ணீரில் உள்ள மீன்கள் மற்றும் அந்த தண்ணீரை பயன்படுத்தும் கால்நடைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்